பதில்:-இந்த கேள்வி எதுகைக்காக இடக்காகவே கேட்கப்பட்டிருந்தாலும் சீரியஸாகவே பதில் சொல்கிறேன், சம்சாரம் என்றால் லைப்பா ஒய்ப்பா? சரி இரண்டிலுமே எத்தனை மின்சாரம் கிடைக்கும் என சொல்கிறேன்.
உயிர் மின்சாரம் என்பது ரெம்ப கொஞ்சம்தான். ஈஸிஜி, ஈஈஜி போன்றவற்றுக்காக அளக்கபடும் உடல் மின்சாரம் மில்லி வோல்ட்டுகளில் இருக்கும்.(மில்லி வோல்ட் என்பது ஒரு வோல்ட்டில் ஆயிரத்தில் ஒரு பாகம், நம்வீட்டு சப்ளை மின்சாரம் 240 வோல்ட்) இந்த உடல் மின்சாரத்தில் இருந்து கறண்ட் எடுக்கமுடியாது, படுத்து விடும், ஆனால் குட்டி மின்நிலையமாகவே இயங்கும் மீன் வகைகள் உண்டு. எலெக்ட்ரிக் ஈல், ரே... இப்படி தென் அமெரிக்க அமேஸான் நதி மீன் வகையானை ஈல், உயிரினங்களிலேயே அதிக மிண்சாரம் பண்ணுகிறது. எவ்வளவு? சுமார் 600 வோல்ட். ஒரு அடி அடித்தால் ஒரு ஜாதிக்குதிரைகூட சுருண்டு விழுந்து விடும். மனிதனை பொறுத்தவரை 10 அடி தூரத்தில் இருந்தாலே போதும் மின்சாரம் பாய்ந்து மரணம்தான், (என்ன சுறாவே தேவலையா?) இத்தனைக்கும் ஒரு எலெட்ரிக் ஈலின் மின்சாரம் இன்னொரு ஈலை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் அதிசயம்.
உங்கள் ஒய்ப் டெரிலின் அல்லது நைலான் அணிந்து கொண்டிருக்க, அவருடன் ஸ்கூட்டரில் போனால் அல்லது நடந்து போனாலே அவர் உடலில் நாலாயிரம் வோல்ட்வரை ஸ்டாட்டிக் மின்சாரம் சேர்ந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது, இந்த மின்சாரத்தை பற்றியும் பயப்பட வேண்டாம் கரண்ட் வாங்க முடியாது. ராத்திரி புடவையை அவிழ்க்கும் போது கொஞ்சம் பட படவென்று சத்தம் வரும் அவ்வளவுதான். சிலசமயம் லேசாக க்ஷாக் அடிக்கும்.